விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்- மனைவி மீது மோசடி வழக்கு


விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-  மனைவி மீது மோசடி வழக்கு
x

பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக உடன் பிறந்த சகோதரர் அளித்த புகாரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் மீதும், அவரது மனைவியும், முன்னாள் துணைவேந்தருமான வள்ளி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்

பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக உடன் பிறந்த சகோதரர் அளித்த புகாரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் மீதும், அவரது மனைவியும், முன்னாள் துணைவேந்தருமான வள்ளி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 58). முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகியான இவர், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அரசு வக்கீலாகவும் பணியாற்றியவர்.

இந்நிலையில் நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ரவிச்சந்திரன் உள்ளார். இவர் எனது உடன் பிறந்த சகோதரர். இவரது மனைவி வள்ளி. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கொடைக்கானல் மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தராக வள்ளி பணியாற்றினார். அப்போது பல்கலைக்கழகம் நடத்திய பல தேர்வுகளில் சிலரை தேர்ச்சி பெற ஏற்பாடு செய்தேன். இந்நிலையில் கொடைக்கானலில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஜய் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது அறிமுகம் கிடைத்தது. இவர் தனது மனைவி சத்யாவிற்கு மகளிர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி பெற்றுத்தர கூறினார்.

இதனை தொடர்ந்து மதுரை குறிஞ்சி நகரில் உள்ள எனது சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்திற்கு சென்று அவரிடம் தெரிவித்தோம். அவரும், அவரது மனைவி வள்ளியும் பேராசிரியர் பணியிடத்திற்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விஜய் ரூ. 15 லட்சம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்ததின் பேரில் நானும், அவரும் ரூ.15 லட்சத்தை ராமுத்தேவன்பட்டியில் வைத்து ரவிச்சந்திரன், வள்ளி ஆகிய இருவரிடமும் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொடுத்தோம்.

எழுத்தர் பணி

இதனைத்தொடர்ந்து விஜய் அவரது உறவினர்களான ஸ்ரீஜா மற்றும் செல்லப்பா என்பவரின் மகள் சத்யா ஆகியோருக்கு பேராசிரியர் பணியிடத்திற்காக ரூ.45 லட்சத்தை ரவிச்சந்திரன், வள்ளியிடம் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொடுத்தோம். இதனை தொடர்ந்து ஜெனிபர், சுகன்யா, கிருஷ்ணம்மாள், சந்திரா மற்றும் கீர்த்தனா ஆகியோருக்கு பல்கலைக்கழக எழுத்தர் பணிக்காக ரூ. 23 லட்சத்தை 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ரவிச்சந்திரன், வள்ளியிடம் கொடுத்தோம்.

ஆனால் யாருக்கும் பணி கிடைக்காத நிலையில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் பணி வழங்க தாமதம் ஆகிறது என்று வள்ளி தெரிவித்தார். இதற்கிடையில் சாத்தூர் மேட்டமலையைச் சேர்ந்த பூபாலன் என்பவருக்கு பஞ்சாயத்து செயலாளர் வேலைக்காக ரூ. 12 லட்சத்தை ரவிச்சந்திரனிடம் கொடுத்தேன். அவருக்கும் வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் ரவிச்சந்திரன், தனது மனைவி துணைவேந்தர் வள்ளிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் விரைவில் பணத்தை தர ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். ஆனாலும் வேலையும் கிடைக்கவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை.

வழக்குப்பதிவு

கடந்த சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ரவிச்சந்திரன், சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக அவருக்கு தரப்பட்ட ரூ. 10.8 கோடியில் எனக்கு ரூ. 25 லட்சம் கொடுத்தார். அதில் நான் ரூ. 15 லட்சத்தை விஜய்யிடம் கொடுத்தேன். மீதி பணத்தை சொத்தை விற்று தருவதாக ரவிச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் இதுவரை பணம் தரவில்லை. நான் இதய அறுவை சிகிச்சை செய்து சிரமத்தில் உள்ளேன். எனவே ரவிச்சந்திரன், வள்ளி மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நியாயம் கிடைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மனோகரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவியும், முன்னாள் துணைவேந்தருமான வள்ளி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story