விருதுநகர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
விருதுநகரில் குடிப்பதற்கு உப்பு தண்ணீர் வினியோகம் செய்வதை நிறுத்த கோரி நகர் மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விருதுநகரில் குடிப்பதற்கு உப்பு தண்ணீர் வினியோகம் செய்வதை நிறுத்த கோரி நகர் மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
உப்பு தண்ணீர்
விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் அணை பகுதி ஆகியவற்றை நீராதாரமாகக் கொண்டு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் நகரின் கிழக்கு பகுதியில் உள்ளவர்களுக்கு தாமிரபரணி தண்ணீரும், மேற்குப் பகுதியில் உள்ள வார்டுகளுக்கு ஆனைக்குட்டம் தண்ணீரும் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக ஆனைக்குட்டம் தண்ணீர் உப்பு தண்ணீராக மாறிவிட்ட நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
முற்றுகை
இந்தநிலையில் நேற்று 24 மற்றும் 34-வது வார்டு பொதுமக்கள், கவுன்சிலர்கள் ஜெயக்குமார், மஞ்சுளா ஆகியோர் தலைமையில் தங்களுக்கு உப்பு தண்ணீர் வினியோகம் செய்வதை தவிர்க்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுபற்றி கவுன்சிலர் ஜெயக்குமார் கூறுகையில், ஆனைக்குட்டம் அணை நீர்பிடிப்பு பகுதியில் உள்ள தண்ணீரும் தடுப்பணை தண்ணீரும், 14 உறைகிணறுகளிலுள்ள தண்ணீரும் உப்பு தண்ணீராக மாறிவிட்டது. தாமிரபரணி தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கம் காருசேரி குவாரி தண்ணீர் நல்ல தண்ணீராக இருப்பதால் அதனை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உறுதி
இதனை தொடர்ந்து நகராட்சி என்ஜினீயர் மணி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், ஆனைக்குட்டம் குடிநீர் வினியோகம் செய்வதை நிறுத்திவிட்டு மாற்றாக குடிநீர் வினியோக நாட்கள் தாமதமானாலும் நல்ல குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஆனைக்குட்டம் தண்ணீர் உப்பு தண்ணீராக மாறியது குறித்தும், தண்ணீரின் பயன்பாட்டு தகுதி குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.