அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரில் சென்றுகிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகள் நிவர்த்தி செய்யப்படும்:கனிமொழி எம்.பி. தகவல்
அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று குறைகள் நிவர்த்தி செய்து தரப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
மக்கள் களம் நிகழ்ச்சி
ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வு, கொல்லங்கிணறு, தென்னம்பட்டி, மலைப்பட்டி, சங்கம்பட்டி ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. 141 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை ஆகிய நல திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மருதன்வாழ்வு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
அப்போது கனிமொழி எம்.பி பேசுகையில்,
வீடுகளுக்கு குடிநீர்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மகளிர்கள் பஸ்களில் இலவசமாத பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். மேலும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை கொண்டு வந்து ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகள் வழங்கப்படுகிறது. வருகிற செப்.,15-ந் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி கொல்லங்கிணறு பகுதி மக்களுக்காக ரூ.3.61 கோடி மதிபீட்டில் வீடுகள்தோறும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் மழை நீர் வடிகால், புதிய சாலை பணிகள், நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. மலைப்பட்டி ஊராட்சியில் ரூ.1.56 கோடி மதிப்பில் 37 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை
மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தில் உள்ள எல்லா ஊராட்சிகளுக்கும் சென்று கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் கோரிக்கை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. நீங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கலாம். எங்களால் ஆன முயற்சிகள் செய்வோம், என்றார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவர் வாங்கினார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜோன் கிறிஸ்டிபாய், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ்குமார், நாகராஜன், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி கலையரங்கில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் டி. மகேந்திரன், இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகிேயார் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். பின்னர் மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு எம்.பி. பதில் அளித்தார். இதில் கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர். ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.