சேலத்துக்கு 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: கருப்பூரில் மேடை அமைக்கும் பணி தீவிரம்-அதிகாரிகளுடன், கலெக்டர் கார்மேகம் ஆலோசனை
சேலத்துக்கு வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கருப்பூரில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார்.
முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சேலத்துக்கு வருகிற 11-ந் தேதி வருகிறார். அவர், அன்றைய தினம் காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு வருகிறார். இதையடுத்து அண்ணா பூங்காவில் அமைக்கபட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து அவர், ஈரடுக்கு பழைய பஸ் நிலையம், பெரியார் பேரங்காடி, நேரு கலையரங்கம் உள்ளிட்டவைகளை திறந்து வைக்கிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேடை அமைக்கும் பணி
12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசு சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பணிகள் முடிந்த திட்டங்களை தொடங்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்காக கருப்பூரில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறதா? என்பதை அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் காஷிய ஷசாங் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, பயிற்சி கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெயிண்டு அடிக்கும் பணிகளும், தூய்மைப்படுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.