ஆதிச்சநல்லூருக்கு உதவி கலெக்டர் வருகை
ஆதிச்சநல்லூருக்கு நெல்லை பயிற்சி உதவி கலெக்டர் வருகை தந்து, அகழ்வாராய்ச்சி குறித்து கேட்டறிந்தார்.
ஸ்ரீவைகுண்டம்:
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வுகள் நடைபெற்றது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்க அணிகலன்கள், வெண்கல பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆதிச்சநல்லூர் அருகே திருக்கோளூரில் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் நேற்று ஆதிச்சநல்லூருக்கு வந்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவருக்கு, அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் குறித்து தொல்லியல் துறையினர் விளக்கம் அளித்தனர். பின்னர் திருக்கோளூருக்கு சென்ற உதவி கலெக்டருக்கு, அங்கு நடைபெறும் அகழாய்வுகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.