மதுரை விமான நிலையத்தில் 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை
மதுரை விமான நிலையத்தில் 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
வருகிற 26-ந் தேதி குடியரசு தினம் என்பதால், அதை முன்னிட்டு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அதில் ஒரு பகுதியாக மதுரை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய உள்பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணி, முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல விமான நிலையத்தினை சுற்றிலும் 24 மணிநேரமும் ரோந்து பணி மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.