தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?;
தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? என்பது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.
மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.
சுகமான நினைவுகள்
அம்மா அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.
காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.
100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.
இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.
விரல் நுனியில் தொழில்நுட்பம்
சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.
தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.
விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் மேலாளர், சினிமா ரசிகர்கள், குடும்ப தலைவிகள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் வருமாறு:-
காட்சிகளின் பிரமாண்டம்
மாயாண்டி (திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டர் மேலாளர்):- கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊருக்கு 3 அல்லது 4 திரையரங்குகள் தான் இருக்கும். நான்கு திரையரங்குகளிலும் வேறு, வேறு சினிமா படங்கள் திரையிடப்படும். மேலும் அப்போது மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக திரையரங்குகளே இருந்தன. டி.வி.க்கள் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டுமே இருந்தன. இதனால் பெருவாரியான மக்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்தனர். படங்களும் ஓராண்டுக்கு மேல் கூட ஓடின. தற்போது டி.வி.க்கள், ஸ்மார்ட் போன்களின் வருகை காரணமாக வீடுகளிலேயே படம் பார்க்கும் நிலை உள்ளது என்றாலும் காட்சிகளின் பிரமாண்டத்தை உணர வேண்டும் என்றால் அவர்கள் திரையரங்குகளை தேடி தான் வருகின்றனர். என்னதான் கையடக்க செல்போனில் படம் பார்த்தாலும் திரையரங்கில் கிடைக்கும் அனுபவம் அதில் கிடைப்பதில்லை. எனவே திரையரங்குக்கு வரும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை.
ஒரு திரையரங்கில் நவீன தொழில்நுட்பம், சுகாதாரம், குடிநீர், குளிர்சாதன வசதி ஆகியவை சிறப்பாக இருந்தால் அந்த திரையரங்கை தேடி மக்கள் கூட்டம் வந்துகொண்டே தான் இருக்கும். அதைபோல தான் எங்கள் திரையரங்கும். 1999-ம் ஆண்டு முதல் தற்போது வரை எங்கள் திரையரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதே நேரம் அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்.
திரையரங்கில் பார்ப்பதே மகிழ்ச்சி
கற்பகம் (குடும்ப தலைவி, திண்டுக்கல்):- திரையரங்குக்கு குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பதே மகிழ்ச்சி தருகிறது. ஒரு படத்தின் பிரமாண்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அது திரையரங்கில் வந்து பார்த்தால் மட்டுமே முடியும். என்னதான் வீடுகளில் 'ஹோம் தியேட்டர்' உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி நாம் படம் பார்த்தாலும், திரையரங்கில் குளிரூட்டப்பட்ட அறையில் ஆயிரம் பேருக்கு மத்தியில் அமர்ந்து சினிமா படம் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி வீட்டில் படம் பார்க்கும் போது கிடைக்காது.
கார்த்திக் (தொழிலாளி, நாகல்நகர்):- நான் 6 ஆண்டுகளாக சினிமா படம் பார்க்கிறேன். அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்கு வந்து தான் பார்ப்பேன். டி.வி.க்கள், ஓ.டி.டி. இணையதளம் என எதிலும் பார்ப்பதில்லை. திரையரங்கில் வந்து சினிமா படம் பார்க்கும் போது தான் காட்சிகளின் பிரமாண்டத்தை கண்டு வியக்க முடிகிறது. அந்த அனுபவத்திற்காகவே திரும்ப, திரும்ப திரையரங்குக்கு வந்து படம் பார்க்க தோன்றுகிறது. எனவே நவீன தொழில்நுட்பங்களால் திரையரங்குக்கு வரும் ஆர்வம் எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்றவர்களுக்கும் குறையவில்லை.
துல்லியமான காட்சிகள்
சவுபர்னிகா (குடும்ப தலைவி, பழனி):- திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் அனுபவமே அலாதியானது. 2 மணி நேரம் நம்மையும் மறந்து அந்த காட்சிகளுடன் நம்மை ஒன்றச்செய்வது திரையரங்கு மட்டுமே. வீடுகளில் பெரிய திரைகட்டி படம் பார்த்தால் கூட அந்த அனுபவம் கிடைக்காது. தற்போது அனைத்து திரையரங்குகளுமே நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. இதனால் காட்சிகள் மிக துல்லியமாக இருக்கிறது. இது தான் திரையரங்குகளை நோக்கி மக்களை இழுக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.