விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்


விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
x

விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

லால்குடி:

லால்குடி அருகே வாளாடியில் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், கடந்த 1988-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் கும்பாபிேஷகத்துக்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டு பாலாலயம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் காசி விஸ்வநாதர் சன்னிதி, விசாலாட்சி அம்பாள் சன்னதி, மாத்ருபூதேஸ்வரர் சன்னிதி, சித்தி விநாயகர் சன்னிதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சன்னிதி, தட்சிணாமூர்த்தி சன்னிதி, துர்க்கையம்மன், பைரவர், சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய சன்னிதிகளில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி கணபதி ஹோமம், பூர்ணாகுதி, 6-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், 7-ந் தேதி முதற்கால யாகபூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகபூஜையும், நேற்று நான்காம் கால யாகபூஜையும் நடைபெற்றது. இதையடுத்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, அனைத்து கோபுர கலசங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

34 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, தொழிலதிபர் ஜான்சன், வாளாடி ஊராட்சி தலைவர் மல்லிகாமதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமலதா, திருப்பணிகள் குழு தலைவர் மணிசக்ரபாணி உள்பட கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story