விவேக் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் 3-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படும்
பயணிகளின் குழப்பத்தை தவிர்க்க விவேக் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்பட்டது.
நாகர்கோவில்:
பயணிகளின் குழப்பத்தை தவிர்க்க விவேக் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்பட்டது.
விவேக் எக்ஸ்பிரஸ்
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக திப்ரூகருக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு 5.40 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தை வந்தடையும்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் 1-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார்கள். ரெயில் புறப்பட்டு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் பாதைக்கு திரும்பிய பிறகு தான் பயணிகளுக்கு ரெயில் மாறி ஏறியது தெரியவந்தது. இதனால் அவர்கள் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்கள். பின்னர் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி மீண்டும் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில் மாறி ஏறியதற்கு முறையான அறிவிப்பு ஏதும் இல்லாதது தான் காரணம். மேலும் ஒரே பிளாட்பாரத்தில் 2 ரெயில்கள் வருவதாலும் குழப்பமாக உள்ளது என பயணிகள் குற்றம்சாட்டினர்.
பயணிகள் குழப்பத்தை...
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் விவேக் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 3-வது பிளாட்பாரத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி சென்றது. வழக்கமாக இந்த ரெயில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வரும். தற்போது பயணிகளின் குழப்பத்தை தவிர்க்க பிளாட்பாரம் மாற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் முதலாவது பிளாட்பாரம் வழியாக இயக்கப்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் 1-வது பிளாட்பாரத்திற்கு வருவதால் சென்னை செல்லும் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுவதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து இந்த ரெயிலை 3-வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.