விவேகானந்தர் மண்டபத்தை 11 நாட்களில் 81,500 பேர் பார்வையிட்டனர்
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் ‘களை’ கட்டியுள்ளது. கடந்த 11 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 81 ஆயிரத்து 500 பேர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் 'களை' கட்டியுள்ளது. கடந்த 11 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 81 ஆயிரத்து 500 பேர் பார்வையிட்டனர்.
விவேகானந்தர் மண்டபம்
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்து விட்டு, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுவார்கள்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.
81,500 பேர் பார்வையிட்டனர்
தற்போது சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வருகிறார்கள். இதனால் சீசன் களை கட்டுகிறது.
சபரிமலை சீசன் தொடங்கி கடந்த 17-ந் தேதி முதல் நேற்று வரை 11 நாட்களில் மொத்தம் 81 ஆயிரத்து 514 பேர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்துள்ளனர். அதாவது 17-ந் தேதி 5 ஆயிரத்து 630 பேரும், 18-ந் தேதி 6 ஆயிரத்து 725 பேரும், 19-ந் தேதி 8 ஆயிரத்து 590 பேரும், 20-ந் தேதி 8 ஆயிரத்து 722 பேரும், 21-ந் தேதி 6 ஆயிரத்து 597 பேரும், 22-ந் தேதி 6 ஆயிரத்து 507 பேரும், 23-ந் தேதி 6 ஆயிரத்து 969 பேரும், 24-ந் தேதி 7 ஆயிரத்து 324 பேரும், 25-ந் தேதி 7 ஆயிரத்து 52 பேரும், 26-ந் தேதி 8 ஆயிரத்து 898 பேரும், நேற்று 8 ஆயிரத்து 500 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.