விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில்சித்திரை திருவிழா தேரோட்டம்
விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 10-ம் நாளான நேற்று மாலையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மண்டகப்படி சார்பில் தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன. காலை 10.30 மணிக்கு கீழவாசலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து ரதாரோகணம் நடந்தது.
பின்னர் சுவாமி, அம்மன் அலங்கார கோலத்தில் தேரில் எழுந்தருளினர். மாலை 5 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது.
தேரில் சமுதாயகொடி
தேர் நிலையை விட்டு புறப்பட்டு சில அடி தூரமே நகர்ந்த நிலையில், தங்களது சமுதாயக் கொடி தேரில் கட்ட வேண்டும் என அங்கிருந்த மக்கள் கூறினர்.
அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் தேரில் சமுதாயக் கொடி கட்டப்பட்டதை தொடர்ந்து தேரோட்டம் மீண்டும் நடந்தது. விழாவில் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தாசில்தார் சசிகுமார், கோவில் ஆய்வாளர் சிவகளைப்பிரியா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் ரத வீதிகளை சுற்றி இரவு் 8 மணி அளவில் நிலையை வந்து அடைந்தது.