விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா


விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

சித்திரை திருவிழா

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து கொடிப்பட்டம் ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் காலை 10.30 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமான் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில், மார்க்கண்டேயன்,எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருக்கல்யாணம்

விழாவில், 7-ம் நாளான ஏப்.29-ந் தேதி இரவு 7 மணிக்கு நடராஜர் சபாபதி சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளலும், இரவு 9 மணிக்கு அபிஷேகமும், 10 மணிக்கு வெள்ளை சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது. 8-ம் நாளான ஏப்.30-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு ராஜராஜேஸ்வரி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. 9-ம் நாளான மே 1-ந் தேதி காலை 9 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. 10-ம் நாளான மே 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 5-ந் தேதி தீர்த்தவாரியும், 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story