விளாத்திகுளம் நூலகத்தைடிஜிட்டல் நூலகமாக மாற்ற நடவடிக்கை


தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் நூலகத்தை டிஜிட்டல் நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் நூலகத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த நூலகத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

விளாத்திகுளம் நூலகம்

தூத்துக்குடியில் பாராளுமன்ற உறுப்பினர் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது விளாத்திகுளம் கிளை நூலக வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் விளாத்திகுளம் கிளை நூலகத்தில் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு தேவையான இருக்கைகள் மற்றும் மேஜை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் உத்தரவின் பேரில் விளாத்திகுளத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் கிளை நூலகத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குளிரூட்டப்பட்ட அறை, புதிய தரைத்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு தேவையான இருக்கைகள், பெஞ்ச் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகமாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. ஆய்வு

இதை தொடர்நந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அந்த நூலகத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், நூலகர் சுமித்ரா, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவமனையில்...

மேலும், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு கட்டிடம், புதிய அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மருத்துவ அலுவலர் சீனிவாசன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story