பெண்-கள்ளக்காதலனுக்கு சரமாரி அடி-உதை
ஜலகண்டாபுரம் அருகே கள்ளக்காதலனுடன் தங்கிய பெண்ணை அவருடைய கணவர் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
மேச்சேரி:
ஜாமீனில் வந்தவர்
ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் எல்லை காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 28), நெசவு தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த அவருடைய சின்ன மாமனார் பட வெட்டி என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றார்.
பின்னர் அவர் ஜாமீனில் வந்து, நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டின் அருகில், பெரிய சோரகை கணக்கு பட்டிகாட்டுவளவை சேர்ந்த சுந்தரம் (38) என்பவரின் மனைவி சுகுணா, தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
கணவருடன் கோபித்து கொண்டு வந்து அங்கு தங்கிய சுகுணாவுக்கும், ரங்கசாமிக்கும், பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சுகுணாவின் கள்ளக்காதலாக கணவர் சுந்தரம் தெரிந்து கண்டித்து உள்ளார்.
சரமாரி தாக்குதல்
அதே நேரத்தில் ரங்கசாமியின் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டதால், அங்கிருந்து சொந்த ஊரான ஆவடத்தூர் பகுதிக்கு ரங்கசாமி சென்று குடியேறினார். சம்பவத்தன்று சுகுணா ரங்கசாமியின் வீட்டிற்கு வந்து தன்னால் கணவருடன் குடும்பம் நடத்த முடியாது, உன்னிடமே இங்கேயே தங்கி நாம் இருவரும் குடும்பம் நடத்தலாம் என கூறி இரவு அவர் வீட்டிலேயே தங்கி உள்ளார்.
இதை தெரிந்து கொண்ட சுகுணாவின் கணவர் சுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் அழகேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் ரங்கசாமியின் வீட்டிற்கு வந்து ரங்கசாமியையும், சுகுணாவையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அவர்களை இரும்பு கம்பி, கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த சுகுணாவும், ரங்கசாமியும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ரங்கசாமி ஜலகண்டாபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சுகுணாவின் கணவர் சுந்தரம் உள்பட 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சுந்தரத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.