இட்லி சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
கன்னியாகுமரியில் இட்லி சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரியில் இட்லி சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
காலை உணவு இட்லி
கன்னியாகுமரியில் நேற்று காலையில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடந்த இந்த தூய்மை பணியில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தேசிய மாணவர் படை பிரிவில் உள்ள 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அப்போது அவர்களுக்கு காலை உணவாக இட்லி, சாம்பார், சட்னி, வடை வழங்கப்பட்டது. மேலும் பாக்கெட்டாக குளிர்பானமும் கொடுக்கப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு வாந்தி
இதனை சாப்பிட்டதில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் திடீரென்று அடுத்தடுத்து வாந்தி எடுத்தனர். இதில் சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அனைத்து மாணவ, மாணவிகளையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 6 மாணவிகள், 7 மாணவர்கள் என 13 பேர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெற்றோர்கள் கதறல்
இந்த சம்பவம் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் தங்களுடைய குழந்தைகளுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என பதற்றத்துடனும், அழுதபடியும் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர் அதிகாரிகளும், போலீசாரும் நடந்த சம்பவத்தை கூறி பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தனர். அனைவரும் நன்றாக இருப்பதாகவும், பயப்பட வேண்டாம் என கூறி ஆறுதல் தெரிவித்தனர். எனினும் தங்களுடைய குழந்தைகளை பார்த்த பிறகு தான் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
அதே சமயத்தில் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் தொடர்ந்து பதற்றமாக இருந்தனர். பின்னர் அங்கிருந்து சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
கலெக்டர்-எம்.பி.ஆறுதல
சாப்பிட்ட உணவு மற்றும் குடித்த குளிர்பானத்தில் ஏதோ ஒன்று கெட்டுப்போனதாக இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாணவ, மாணவிகள் சாப்பிட்ட இட்லி, சாம்பார், சட்னி, வடை மற்றும் குளிர்பானத்தை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அதேபோல் தான் உணவு, குளிர்பானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவில்லை. எனவே பரிசோதனை முடிவில் உண்மையான நிலவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தியதோடு ஆறுதல் கூறினர். அப்போது உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு கலெக்டர் அரவிந்த் வலியுறுத்தினார்.
அந்த சமயத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி, சூப்பிரண்டு அருள் பிரகாஷ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மற்றும் பலர் உடனிருந்தனர். இதேபோல் விஜய் வசந்த் எம்.பி., மாநகர மாவட்ட தலைவர் நவீன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் கூறினார்.
பரபரப்பு
மேலும் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் பாதிப்பு விவரம் குறித்த தகவலை அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் சுபாஷ் ஆகியோரும் மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர். காலை உணவு சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.