மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணி இடைநீக்கம்


மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணி இடைநீக்கம்
x

மதிய உணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில், அந்த பள்ளிக்கூடத்தின் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் கரட்டூர். இங்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 157 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 72 பேர் மாணவர்கள், 85 பேர் மாணவிகள்.

பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக விஜயலட்சுமி பணியாற்றி வருகிறார். மேலும் 4 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கூடத்தின் சத்துணவு அமைப்பாளராக அத்தாணியை சேர்ந்த ஜவகரும், சமையலராக கரட்டூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

கடந்த 10-ந்தேதி மதியம் பள்ளிக்கூடத்தில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அன்று இரவு வாந்தி மயக்கம் ஏற்பட்டு 129 மாணவ- மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

சிகிச்சைக்கு பின்னர் நேற்று காலை பெரும்பாலான மாணவ- மாணவிகள் வீட்டுக்கு சென்றனர். 14 மாணவ- மாணவிகள் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு மற்றும் குடிநீர் மாதிரிகள் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

பணி இடைநீக்கம்

இந்த நிலையில் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி சத்துணவு அமைப்பாளர் ஜவகர், சமையலர் வள்ளியம்மாள் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜோதிலிங்கம் உத்தரவிட்டார்.

மேலும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு தடையின்றி சத்துணவு வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story