கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி மயக்கம்
திருக்கோவிலூர் அருகே கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்போது கரும்பு வெட்டும் சீசன் முடிந்துவிட்ட நிலையில் அதை கொண்டாடும் வகையில் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் ஒன்றுகூடி கோழிக்கறி விருந்து வைத்து சாப்பிட்டனர். பின்னர் அன்று இரவு முதல் கறி விருந்து சாப்பிட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் சுமார் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருவண்ணாமலை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்து மணலூர்பேட்டை போலீசார் குறிப்பிட்ட கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கறி விருந்து சமைப்பதற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து இருந்தது தெரியவந்தது. இதனால் சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்தி உணவு சமைத்து சாப்பிட்டு இருப்பதால் அதன் காரணமாக வாந்தி-வயிற்றுபோக்கு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.