தருமபுரி மாவட்டத்தில், அடுத்த மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு-மேற்பார்வையாளர் சோபனா தகவல்


தருமபுரி மாவட்டத்தில், அடுத்த மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு-மேற்பார்வையாளர் சோபனா தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மேற்பார்வையாளர் சோபனா தெரிவித்தார்.

பிழையில்லா வாக்காளர் பட்டியல்

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனரும், மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளருமான சோபனா தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் சோபனா பேசியதாவது:-

இறுதி வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தர்மபுரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கடந்த 8-ந் தேதி வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, அரூர் உதவி கலெக்டர் ராஜசேகரன், தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு

முன்னதாக தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பூர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி, பள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் சோபனா நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


Next Story