மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைத்துள்ளனர்-கலெக்டர் சாந்தி தகவல்


மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைத்துள்ளனர்-கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்களது ஆதார் விவரங்களை இணைத்துள்ளனர் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆதார் இணைப்பு பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 29 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர்களில் 81.49 சதவீதமான 10 லட்சத்து ஆயிரத்து 662 பேர் தங்கள் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலவச உதவி எண்

இதன்படி வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கான படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள வாக்காளர்கள், தாமாக முன்வந்து தங்களுடைய ஆதார் விவரங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க www.nvsp.in என்ற இணையதள முகவரியில் Apply online/correction of entries என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். இதேபோல் செல்போனில் voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story