தர்மபுரி மாவட்டத்தில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்


தர்மபுரி மாவட்டத்தில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் சோபனா அறிவுறுத்தினார்.

ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனரும், மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளருமான சோபனா தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி முன்னிலைவகித்தார்.

பிழையில்லா வாக்காளர் பட்டியல்

கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் சோபனா பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தர்மபுரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 5-ந் தேதி (இன்று) வெளியிடப்பட உள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல் தணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, அரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன், தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி, அனைத்து தாசில்தார்கள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story