குமரி மாவட்டத்தில் இன்று 5 இடங்களில் வாக்குப்பதிவு
காலியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், குமரி மாவட்டத்தில் இன்று 5 இடங்களில் வாக்குப்பதிவு
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 30-4-2022 வரை ஏற்பட்ட காலி பதவியிடங்களுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு உறுப்பினர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டு உறுப்பினர், மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர், கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் ஆகிய காலி பதவியிடங்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. பள்ளம்துறை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் கோல்டுவின் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ள வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இந்த தற்செயல் தேர்தலுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவதுடன், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.