விருத்தாசலம் பகுதியில்பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள்சப்-கலெக்டர் ஆய்வு
விருத்தாசலம் பகுதியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 237 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1917 பயனாளிகள் வீடுகள் கட்டி முடித்துள்ளனர். 3320 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஊராட்சிகளில் நடைபெறும் பிரதமர் வீடு வழங்கும் திட்ட பணிகள் 100 சதவீதம் தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி சத்தியவாடி ஊராட்சியில் நடந்து வரும் வீடுகள் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தகுதியான பயனாளிகளுக்கு தான் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்த அவர் கிராமத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது, எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, கட்டப்படாத பயனாளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வீடுகள் கட்ட ஆரம்பிக்காத பயனாளிகளை சந்தித்து விரைவில் வீடுகளை கட்டுமாறு கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமாரி, பணி மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதேபோல ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியிலும் சப்-கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உடன் இருந்தார்.