விருத்தாசலம் பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிக்கும் துப்புரவு பணியாளர்கள் மூச்சுத்திணறலால் அல்லல்படும் பொதுமக்கள்
விருத்தாசலம் பகுதியில் துப்புரவு பணியாளர்கள், குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் மூச்சுத்திணறலால் பொதுமக்கள் தினம்தினம் அல்லல்படுகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் அமைந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலம் நகர பகுதியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்திட, வடவாடி அருகே குப்பை கிடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து, குப்பைகளை உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் உரம் தயாரித்த பின்பு, அவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
சமீப காலமாக துப்புரவு ஊழியர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல், ஆங்காங்கே திறந்த வெளிகளில் கொட்டி வருகின்றனர். குறிப்பாக பாலக்கரை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, பாலத்தின் இறக்கத்தில் கொட்டி தீ வைத்து எரித்து விட்டு சென்று விடுகின்றனர். மேலும் விருத்தாசலம்-பெண்ணாடம் சாலையில் சித்தலூர் சுடுகாடு அருகேயும், ஆலிச்சிக்குடி செல்லும் வழியில் புறவழிச்சாலையில் இறைச்சி கழிவுகள், சலூன் கடை கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், காலாவதியான உணவு பொருட்கள் ஆகியவற்றை குவியல் குவியலாக கொட்டி குவித்து தீவைத்து எரிக்கின்றனர்.
நடவடிக்கை
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாலை முழுவதும் புகை சூழ்ந்திருப்பதால், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே சுகாதார சீர்கேட்டினால் சிக்கி தவிக்கும் விருத்தாசலம் மக்கள், தற்போது தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.