விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது பெருவிழாவுக்கு முன்னதாக கிராம தேவதைகளுக்கு உற்சவம் நடைபெறும். முதலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன் கோவிலுக்கும், அதன்பிறகு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான ஆழத்துக்கு விநாயகருக்கும் உற்சவம் நடைபெறும். அந்த வகையில் அய்யனார், செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், ஆழத்து விநாயகர் கோவில் தேரோட்டமும் நடந்தது.
கொடியேற்றம்
இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் உற்சவர்களுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, விழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
5-ந்தேதி தேரோட்டம்
விழாவில் வருகிற 2-ந் தேதி(வியாழக்கிழமை) விருத்தகிரீஸ்வரர், கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 5-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்ட நிகழ்ச்சியும், 6-ந் தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 7-ந் தேதி தெப்ப உற்சவமும், 8-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.