விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:46 PM GMT)

மாசிமக பெருவிழாவை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா தொடங்குவதற்கு முன்பாக, கிராம தேவதைகளாக கருதப்படும், அய்யனார், செல்லியம்மன் மற்றும் ஆழத்து விநாயகருக்கும் திருவிழா நடைபெறும்.

அதன்படி, அய்யனார் கோவிலில் நேற்று காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதற்கு அடுத்தபடியாக விருத்தாசலம் மணிமுக்தாற்று கரையில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்குகிறது. அதேபோன்று, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் கோவில் கொடியேற்றம் வருகிற 14-ந்தேதியும் தொடங்க உள்ளது.

மாசிமக கொடியேற்றம்

இதன்பின்னர், அடுத்த மாதம்(பிப்ரவரி) 25-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சிகளாக, விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக விழா மார்ச் 2-ந்தேதியும், 5-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 6-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், மார்ச் 7-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. அதேபோன்று 8-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 9-ந்தேதி விடையாற்றி உற்சவம் தொடங்கி 18-ந்தேதி வரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

மாசிமக பெருவிழாவுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில், பஞ்ச மூர்த்திகள் தேரை சரிசெய்து தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தெப்பக்குளத்தில் தூய்மை பணி

அதேபோன்று பாலக்கரையில் உள்ள, தெப்பக்குளத்தில் மார்ச் 7-ந்தேதி நடக்கும் தெப்ப உற்சவத்தில் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவத்தில் எழுந்தருளி காட்சி தருவார். இதற்கான தெப்பக்குளம் சீரமைக்கம் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இதில், நகராட்சி ஊழியர்கள் தெப்பக்குளத்தில் இருந்த குப்பை கழிவுகள் மற்றும் செடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகளை விருத்தாசலம் நகர மன்ற தலைவி டாக்டர் சங்கவி முருகதாஸ் பார்வையிட்டார். துப்புரவு அலுவலர் பூபதி, துப்புரவு ஆய்வாளர், சிவராமகிருஷ்ணன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்தமிழ் செல்வன், ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள் தீபா மாரிமுத்து, ஷகிலா ராஜா முகமது, உஷா பாலு, ராஜ்குமார், கருணா, மற்றும் நகராட்சி பரப்புரையாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story