திண்டுக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


திண்டுக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

திண்டுக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழாவையொட்டி அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திண்டுக்கல்

வ.உ.சி. பிறந்தநாள்

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல்-திருச்சி சாலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நடந்தது. திண்டுக்கல் வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் தனபாலன், பொருளாளர் பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரை தொடர்ந்து அறக்கட்டளை நிர்வாகிகள், தி.மு.க.வினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர்

இதேபோல் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை நிர்வாகிகள் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மாலை அணிவித்து மரியாதை

வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில தலைவர் சுரபி கே.பழனிசாமி, திண்டுக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர் சண்முகபிரபு, சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி மற்றும் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி. மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாள் விழா நாகல்புதூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். இதில் வ.உ.சி., ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உருவபடங்களுக்கு துணை தலைவர் மாரியப்பன் மாலை அணிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு டால்டன் நோட்டு புத்தகம் வழங்கினார். இதில் செயலாளர் வெங்கிடு உள்பட பலர் கலந்து காண்டனர்.

கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வ.உ.சி., தாதாபாய் நவ்ரோஜி ஆகியோரின் பிறந்தநாள் விழா தெற்குரதவீதியில் நடந்தது. இதற்கு பொறுப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார்.இளைஞர் அணி தலைவர் விஜய் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வ.உ.சி., தாதாபாய் நவ்ரோஜி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் தங்கபாண்டி, துணை தலைவர் யுவராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு அனைத்து பிள்ளைமார் சங்கம், தமிழ்நாடு வ.உ.சி. நல பேரவை ஆகியவை சார்பில் வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு நடந்த விழாவில் சங்க தலைவர் ஜெயமாணிக்கம் தலைமையில் நிர்வாகிகள் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

வேடசந்தூர் ஆத்துமேட்டில் நடந்த விழாவில் தமிழக வெள்ளாளர் பேரவை வேடசந்தூர் தொகுதி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதையடுத்து அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பி.பரமசிவம் தலைமையில் அ.தி.மு.க.வினர் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் தலைமையில் வ.உ.சி. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பழனி

பழனி வ.உ.சி. மன்றம் சார்பில் பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் நடந்த விழாவில் சித்தனாதன் சன்ஸ் சிவநேசன் தலைமை தாங்கி வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணவித்து மரியாதை செய்தார். அதையடுத்து தமிழக வெள்ளாளர் பேரவை கவுரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் வ.உ.சி. உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். சோழிய வெள்ளாளர் பேரவை சார்பில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் வ.உ.சி. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ் தலைமையில் அக்கட்சியினர் வ.உ.சி. படத்துக்கு மரியாதை செய்தனர்.


Next Story