பாறு கழுகுகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
முதுமலையில் பாறு கழுகுகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
கூடலூர்
முதுமலையில் பாறு கழுகுகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
பாறு கழுகுகள்
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், காட்டெருமைகள், கரடிகள், மான்கள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இது தவிர மயில் உள்ளிட்ட பறவையினங்களும் ஏராளமாக உள்ளது.
இதில், இறந்து கிடக்கும் வனவிலங்குகளின் உடல்களை தின்று உயிர் வாழ்வதால் காடுகளின் சுகாதாரத்தை பேணும் பணியில் பாறு கழுகுகள் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் ரசாயனங்களின் பயன்பாடு அதிகரிப்பால் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நீலகிரி உயிர்க்கோள காப்பகத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள பகுதியில் ஒருங்கிணைந்த பாறு கழுகுகளின் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.
கணக்கெடுப்பில் 30 குழுக்கள்
முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், நாகர்கோலே புலிகள் காப்பகம், வயநாடு சரணாலயம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக தொடர் வன எல்லைப்பகுதிகளில் தற்போது இருக்கும் பிணந்திண்ணி(பாறு) கழுகுகளை மதிப்பிடும் பணி நேற்று தொடங்கியது. முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் பாறு கழுகுகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கணக்கெடுக்கும் பணியில் 30 குழுவினர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்று மாலை 5 மணி வரை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் துறை ரீதியாக பதிவு செய்யப்பட்டு பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறித்த முழு விவரம் வெளியிடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.