திருவெண்ணெய்நல்லூர் அருகேவியாக்கிர பாதீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே வியாக்கிர பாதீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடத்தில் பிரசித்தி பெற்ற நீலவிசாலாட்சி சமேத வியாக்கிர பாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, விநாயகர் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதிஉலா நடந்தது. விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், நீலவிசாலாட்சி சமேத வியாக்கிர பாதீஸ்வரர் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.