"எனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்" ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
“எனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்”, என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு துருவங்களாக பிரிந்தனர். கடந்த ஜூலை மாதம் நடந்த அக்கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட ரீதியான முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
கட்சியில் தனது செல்வாக்கை இழந்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்க போகிறது? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
இந்த சந்திப்புக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, "கட்சி தொண்டர்களை முழுமையாக நம்புகிறோம். தொண்டர்கள் விரும்பும் வகையில் தான் எனது அரசியல் பயணமும் இருக்கும். அனைவரும் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவே இருக்கிறேன். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்", என்றார்.
ஏற்கனவே கடந்த மாதம் சசிகலாவும், பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். அவரைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அவரை சந்தித்துள்ளார்.
இந்தநிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'தலைமையை மாற்ற வேண்டும்'
தலைமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தான் அ.தி.மு.க.வில் நிலவுகிறது. அரசியலை நடத்துவதற்கான போதுமான அனுபவமும், ஆற்றலும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில்அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. எனவே தலைமையை மாற்றவேண்டும். கட்சியை காப்பாற்ற, அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமை தேவை. அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் சொந்த விருப்பு வெறுப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் நடத்துகிறார். இது அ.தி.மு.க.வுக்கு ஆபத்து. எனவே தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை தலைமை பொறுப்புக்கு கொண்டுவர முயற்சி செய்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் அதிர்ச்சி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தநிலையில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் கடந்த 8-ந்தேதி எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகம் வந்தார். அன்றைய தினமே அங்கிருந்த பேனர்களில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களை தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். இதையடுத்து புதிய பேனர்கள் அமைக்கப்பட்டு வந்தன.
தற்போது அந்த பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அந்த பேனர்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் எதுவுமே இடம்பெறவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, இந்த பேனர் விவகாரம் பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.