கரும்பு லாரியை எதிர்பார்த்து திம்பம் மலைப்பாதையில் நின்ற ஒற்றை யானை


கரும்பு லாரியை எதிர்பார்த்து   திம்பம் மலைப்பாதையில்  நின்ற ஒற்றை யானை
x
தினத்தந்தி 21 Sept 2022 1:00 AM IST (Updated: 21 Sept 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஒற்றை யானை

ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த புலிகள் காப்பகத்தின் வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்று வரும்.

அவ்வாறு செல்லும் கரும்பு லாரி டிரைவர்கள் கரும்பு கட்டுகளை எடுத்து யானைகளுக்காக சாலையோரத்தில் வீசிச்செல்வார்கள். இதனால் கரும்புகளை ருசி பார்த்துவிட்ட யானைகள் நாள்தோறும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காட்டுக்குள் இருந்து மலைப்பாதைக்கு வந்துவிடுகின்றன.

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் முதலாவது சுற்றில் கரும்பு லாரியை எதிர்பார்த்து ஒரு யானை நடுரோட்டில் நின்றுகொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டார்கள். நீண்ட நேரம் ஆகியும் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் ஏதும் வராததால் சலிப்படைந்த யானை சாலையோரம் ஏற்கனவே யானைகள் மென்று துப்பியிருந்த கரும்பு சக்கையை எடுத்து ருசித்தது. பின்னர் கீழே போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் காட்டுக்குள் சென்றது. அதன் பிறகே திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லத்தொடங்கின.


Next Story