கரூரில் கோவில்களின் நடை அடைப்பு


சூரிய கிரகணத்தையொட்டி கரூரில் நேற்று கோவில்களின் நடை அடைக்கப்பட்டன.

கரூர்

சூரிய கிரகணம்

தீபாவளிக்கு மறுநாளான நேற்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்தியாவின் சூரிய கிரகணம் நேற்று மாலை 4.29 மணி முதல் மாலை 5.42 மணி வரை தென்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.

நாடு முழுவதும் கோளரங்களில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரிய கிரகணத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய கோவில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கோவில்கள் அடைப்பு

அந்த வகையில் கரூரிலும் கோவில்கள் நடை அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சூரிய கிரகணத்தையொட்டி நடை அடைக்கப்பட்டிருந்தன.

இதில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மதியம் 12.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் காலை 11 மணி முதல் மாலை 6.30 மணி வரையும், கரூர் மாரியம்மன் கோவில் மாலை 4 மணி முதல் மாலை 6.15 மணி வரையும் அடைக்கப்பட்டிருந்தன. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் கோவில்கள் சுத்தம் செய்து, நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


Next Story