மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடை பயணம்
வந்தவாசியில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடை பயணம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நீர்நிலைப்பகுதியில் குடியிருந்து வரும் பழங்குடி காட்டுநாயக்கன் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரியும் கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் இருந்து வந்தவாசி தாலுகா அலுவலகம் வரை 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் கிளைச் செயலர் கீ.செ.மோகன் தலைமையில் பழங்குடி காட்டுநாயக்கன் மக்களுடன் நடைப்பயணமாக புறப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சுண்ணாம்புமேடு, சேத்துப்பட்டு, தெள்ளூர், மும்முனி, அம்மையப்பட்டு ஆகிய கிராமங்களை கடந்து வந்தவாசி தாலுகா அலுவலகம் சென்றடைந்தனர்.
அங்கு தாசில்தார் அறை முன் தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டச் செயலர் மா.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், தாலுகா செயலர் அ.அப்துல்காதர், காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்க மாநில பொதுச் செயலர் எ.அய்யனார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, தாலுகாக்குழு உறுப்பினர் எம்.சுகுமார் மற்றும் பழங்குடி காட்டுநாயக்கன் மக்கள் கலந்து கொண்டனர்.