பாப்பாரப்பட்டி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்தது-தொழிலாளி உயிர் தப்பினார்
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளி உயிர் தப்பினார்.
கனமழை
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழையால் மாவட்டத்தின் சில இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைத்த மண் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி மனைவி பாப்பாரப்பட்டியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பழனி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சமீபத்தில் பெய்த மழை காரணமாக இவருடைய வீட்டின் அருகே தண்ணீர் தேங்கி நின்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பழனி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. இந்த மழையால் வீட்டின் சுவர் நனைந்தது. திடீரென வீட்டின் இரு புறம் உள்ள மண் சுவர் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஆட்டு குட்டியும் உயிர் தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சேட்டு மழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த பாதிப்பு தொடர்பாக உரிய நிவாரணம் வழங்க பென்னாகரம் தாசில்தாருக்கு அறிக்கை அளிக்கப்படும்என்றார்.