சுவர் இடிந்து விழுந்து பெண் பலி; சிறுமி படுகாயம்


சுவர் இடிந்து விழுந்து பெண் பலி; சிறுமி படுகாயம்
x

உப்பிலியபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார். சிறுமி படுகாயம் அடைந்தார்.

திருச்சி

உப்பிலியபுரம், ஜூலை.24-

உப்பிலியபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார். சிறுமி படுகாயம் அடைந்தார்.

சுவர் இடிந்து விழுந்தது

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரகாஷ், லாரி டிரைவர். இவரது மனைவி மதுமதி (வயது 27). இவரது வீட்டுக்கு நாமக்கல்லை சேர்ந்த உறவினரான பிரேமா என்பவர் மகள் மித்ரா (9) உடன் வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எரகுடி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, வீட்டின் வெளியே மதுமதியும், மித்ராவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இதனிடையே வீட்டின் எதிரே இருந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத மண் வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் மதுமதியும், மித்ராவும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

சாவு

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் மதுமதியை மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மித்ராவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மதுமதி சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இறந்த மதுமதிக்கு வகித் (4) என்ற மகனும், ஹரிஸ்ரீ என்ற மகளும், அஸ்வித் என்கிற 6 மாத மகனும் உள்ளனர்.

இதற்கிடையே மித்ரா மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். படுகாயம் அடைந்த மித்ரா நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story