நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்
செருவாவிடுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிட வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்;
செருவாவிடுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிட வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்முதல் நிலையம்
பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி வளாகப் பகுதியில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. செருவாவிடுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை இந்த கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
நிரந்தர கட்டிட வசதி
தற்போது செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் செயல்பட்டு வருகிறது. திடீரென மழை பெய்யத் தொடங்கினால் தாரப்பாய் கொண்டு கொள்முதல் செய்த செய்த நெல்லை ஊழியர்கள்பாதுகாக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், நெல்மணிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளும் பெரும் துயரத்துக்கு உள்ளாகின்றனர். வெயில், மழை உள்ளிட்ட இயற்கையின் இடர்பாடுகளில் இருந்து நெல்மணிகளை பாதுகாக்க போதிய அளவு இட வசதி உள்ள தெற்கு ஊராட்சி வளாக பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.