துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையம் அமைக்க வேண்டும்


துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையம் அமைக்க வேண்டும்
x

நீடாமங்கலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்

நீடாமங்கலம், ஜூன்.1-

நீடாமங்கலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் தாலுகாவின் தலைநகரம் ஆகும். இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கோர்ட்டு, தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது.

நீடாமங்கலம் தாலுகாவில் நீடாமங்கலம், வடுவூர், கொரடாச்சேரி ஆகிய வருவாய் வட்டங்கள் உள்ளன. நீடாமங்கலம் நகரில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோவில்வெண்ணியில் பொறியியல் கல்லூரி உள்ளது. நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக சென்னை, கோவைக்கு நாள் தோறும் விரைவு ரயில்கள் சென்று வருகிறது.

போலீஸ் நிலையங்கள்

இவைதவிர வாராந்திர ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நீடாமங்கலம் ரயில் நிலையம் வந்து செல்கிறது. நாள்தோறும் பாசஞ்சர் ரயில்கள், சரக்கு ரயில்கள் நீடாமங்கலம் வழியாக சென்று வருகிறது. மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் பஸ்கள், வேன்கள், கார்கள், லாரிகள், இதர கனரக வாகனங்கள் சென்று வருகிறது. ரயில்வே குட்ஷெட்டும் இயங்குகிறது. நீடாமங்கலம் வட்டத்தில் நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூர் போலீஸ் நிலையங்கள் உள்ளன.

துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

இந்த போலீஸ் நிலையங்கள் தற்போது மன்னார்குடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த போலீஸ் சரக பகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தான் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே குற்ற செயல்களை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையிலும் நீடாமங்கலம் நகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story