ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா?
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி 18-வது வார்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
18-வது வார்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. அதில், 18-வது வார்டு, ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. முன்பு ஓசூர் ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக திகழ்ந்த மூக்கண்டபள்ளி ஊராட்சி தான், மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, ஓசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு சுமார் 10 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் 18-வது வார்டாகும்.
இந்த வார்டில் நேதாஜி நகர், பொதிகை நகர், அன்னை சத்யா நகர், சிவாஜி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 4 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர். முழுக்க, முழுக்க குடியிருப்பு பகுதிகளை கொண்ட இந்த வார்டில், ஒரு மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்
18-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த சசிதேவ் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சி கல்விக்குழு உறுப்பினராகவும் உள்ளார். 18-வது வார்டை பொறுத்தவரை, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை வார்டின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், பற்றாக்குறை ஏற்படாமலும், தங்கு தடையின்றியும் தண்ணீர் வினியோகம் சீராக இருக்க வேண்டும் என்று வார்டு பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
தரமான சாலைகள்
ஓசூர் நேதாஜி நகரை சேர்ந்த ராஜேந்திரன்:-
கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாதவாறு, காவிரி நீரை வார்டின்அனைத்து பகுதிகளுக்கும் சீராக வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். குண்டும், குழியுமாக உள்ள தார்சாலைகளை சீரமைக்க வேண்டும். புதியதாக தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு பகுதிகளில் தரமான சிமெண்டு சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டும். கூடுதலாக தெருவிளக்குகள் பொருத்தப்பட வேண்டும்.
அன்னை சத்யா நகரை சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் சாந்தி:-
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு, உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் அரிசி, மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை சரியாக வினியோகிப்பதில்லை. அளவும் குறைவாக இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். வார்டு பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.