ஓசூர் மாநகராட்சி 21-வது வார்டு சபை கூட்டம்


ஓசூர் மாநகராட்சி 21-வது வார்டு சபை கூட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூர் மாநகராட்சி 21-வது வார்டு சபை கூட்டம் நாகாத்தம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 21-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. பகுதி செயலாளருமான சி.பி.மஞ்சுநாத் வரவேற்றார். கூட்டத்தில் சிமெண்டு சாலை, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் எஸ்.எம்.நகரில் ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், பகுதி நேர ரேஷன் கடை, அரசு பஸ் வசதி, கண்காணிப்பு கேமரா போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் பேசுகையில், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பெற முடியும் என்றார். தொடர்ந்து கவுன்சிலர் மஞ்சுநாத் பேசுகையில், ஏ.வி.எஸ். காலனி மற்றும் கொத்தூர் டி.வி.எஸ். சந்திப்புகளில் ரூ.8 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய், தார்சாலை பணி நடந்து வருகிறது. எஸ்.எம்.நகரில் ஆழ்துளை கிணறு அமைக்க பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அக்ரஹாரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ரூ.24½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள் மற்றும் ரூ.7 லட்சத்தில் கொத்தூர் தொடக்க பள்ளியில் உணவு உண்ணும் கூடம், சுகாதார வளாகம் அமைக்க மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார். இதில் ஸ்ரீதர், சீனிவாச ரெட்டி, ஆப்ரகாம் லிங்கன், வீரமணி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story