அரசு கட்டிடம் இடிக்கப்பட்டதால் வார்டு உறுப்பினர்கள் சாலைமறியல் தனியார் பஸ் சிறைபிடிப்பு
ஜோலார்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் இடித்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் இடித்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு கட்டிடம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஊராட்சி நிர்வாகம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சிக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த கட்டிடத்தை இடித்து விட்டனர். இதை கண்ட ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தனிப்பட்ட நபர் ஒருவர் இரவோடு இரவாக இடித்து தள்ளியது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சின்ன மூக்கனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிரஞ்சீவி, வீரப்பன், கலைச்செல்வி உள்ளிட்டோர் திருப்பத்தூர் - வெலக்கல் நத்தம் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.
சமரசம்
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட செய்தனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.