ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்


ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு  வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்
x

சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த சந்திரபுரம் ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ஜவஹர்லால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

சந்திரபுரம் ஊராட்சிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் ஊராட்சி தலைவர் செய்து தருவதில்லை.

இந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி கணக்கு வழக்குகளை முறையாக வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து அந்தந்த வார்டுகளுக்கு வார்டு உறுப்பினர்களே தங்கள் சொந்த செலவில் அடிப்படை வசதிகளை செய்து கொள்ளுங்கள்.

அதற்கான நிதி பணம் பிறகு கொடுக்கப்படும் என்று கூறியதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை வார்டு உறுப்பினர்கள் செலவு செய்த தொகையினை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இதனை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று திடீரென பூட்டு போட்டு 9 வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் ஜவஹர்லால் தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஒரு நிதியையும் வார்டு உறுப்பினர்களுக்கு கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அதிக கழிவுகள் இருப்பதாகவும் அந்த தண்ணீரை தற்போது வரை சந்திரபுரம் ஊராட்சிக்கு குடிநீராக வினியோகம் செய்து வருகிறார் என்றும், இதனை சுத்தப்படுத்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததாக பணம் பெறப்பட்டுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வார்டு உறுப்பினர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story