அனுமதியின்றி டிரோன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
அனுமதியின்றி டிரோன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதியின்றி டிரோன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரோன்கள்
நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது வீடியோ பதிவு செய்வதற்கு அதிகளவில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வ சாதாரணமாக டிரோன்களை பறக்க வைத்து காட்சிகளை படம்பிடித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால், அதையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்கின்றனர்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் டிரோன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பகல் நேரம் மட்டுமல்லாது இரவிலும் டிரோன்கள் வானில் பறந்து காட்சிகளை படம்பிடித்து வருகின்றன. அதை இயக்குபவர்கள் யார், முறையான அனுமதி பெற்றுள்ளனரா? எதற்காக இவ்வாறு படம் பிடிக்கின்றனர்? போன்ற விவரங்கள் தெரியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர். விழாக்கள் தொடர்பாக டிரோன்கள் பயன்படுத்தினாலும் அதற்கு போலீசாரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், யாரும் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
அனுமதி பெற வேண்டும்
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:- சிவப்பு மண்டலங்களில் டிரோன்கள் பயன்படுத்த முற்றிலும் அனுமதி கிடையாது. மஞ்சள் மண்டல பகுதிகளில் டிரோன்கள் அனுமதி பெற்று குறிப்பிட்ட கால நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த வகையில் பாம்பன்பாலம், ஐ.என்.எஸ். பருந்து விமானதளம், ராமேசுவரம் கோவில் என முக்கிய பகுதிகள் நிறைந்துள்ளது.
எனவே, டிரோன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. யாராவது ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன்கள் பயன்படுத்த விரும்பினால் அதற்கு போலீசாரின் முறையான அனுமதி பெற வேண்டும்.
கடும் நடவடிக்கை
அனுமதி பெறாமல் பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு அனுமதி பெறாமல் பயன்படுத்திய டிரோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் டிரோன் பறந்து செல்வதை கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.