மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி, காலையில் திடீர் தடை: படகுகளில் அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள் கடலூரில் மீன்வளத்துறையின் அடுத்தடுத்த அறிவிப்பால் குழப்பம்


மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி, காலையில் திடீர் தடை:    படகுகளில் அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள்    கடலூரில் மீன்வளத்துறையின் அடுத்தடுத்த அறிவிப்பால் குழப்பம்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நேற்று முன்தினம் மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கிய நிலையில் நேற்று காலை திடீரென தடை விதிப்பதாக மீன்வளத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடலுக்குள் சென்ற மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினார்கள்.

கடலூர்


வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரத்தில் 9-ந்தேதி இரவு கரையை கடந்தது. இந்த புயலையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை.

காற்றுடன் ஓரளவு மழை பெய்தது. இருப்பினும் இந்த காற்றால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதை ஊழியர்கள் அகற்றினர்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதற்கிடையில் புயலால் கடல் காற்று அதிகமாக வீசும் என்றும், கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம், மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 6-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததும் கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை அறிவித்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலையில் மீன்பிடிக்க செல்வதற்கான தடை விலக்கி கொள்ளப்படுவதாக மீன்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

புதிய அறிவிப்பு

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை என மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தொடங்கினர். அதாவது கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் குறைந்த எண்ணிக்கையில் கடலுக்குள் சென்றனர்.

கடலில் தங்கி மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்களும் சிலர் கடலுக்குள் சென்றனர். மற்ற மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரங்களிலும் நிறுத்தி வைத்திருந்ததை பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் நேற்று காலை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், அதிகாரிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டனர். அதில், வங்க கடல் பகுதியில் கடல் காற்றானது 70 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும், இன்று (நேற்று) மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் கடலில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள் யாரும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சென்னை, ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இந்த அறிவிப்பை மீனவர்கள் தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி

மீன்வளத்துறையின் இந்த புதிய அறிவிப்பால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். இருப்பினும் கடற்கரையோரம் மீன்பிடிக்க சென்ற பைபர் படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அதைபோன்று, விசைப்படகுகளில் சென்ற மீனவர்களும் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி வந்ததை பார்க்க முடிந்தது.

நேற்றுடன் தொடர்ந்து 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆழ்கடலுக்குள் 10 படகுகள்

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கடலூர் மாவட்டத்தில் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் வகையில் 306 விசைப்படகுகள் உள்ளன. இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்த படகுகளின் எண்ணிக்கை 296 ஆகும்.

இவற்றில் 10 விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்றுவிட்டனர். இவர்கள் கடலில் தெற்கு பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்கள். அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம். கடலில் வடக்கு பகுதியில் கடல் சீற்றம் தொடர்பாகவும் அவர்களுக்கு தகவல்களை தெரிவித்துள்ளோம். தற்போது அந்த மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

இது தவிர பைபர் படகுகள் 4,315 உள்ளன. நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களுக்கு வானிலை குறித்து அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கரைக்கு திரும்பி வந்துவிட்டனர் என்று தெரிவித்தார்.


Next Story