தக்கலை பகுதியில் அச்சத்தில் தவிக்கும் மக்கள்:2 ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தையா? கூண்டு வைத்து பிடிக்க முடிவு
தக்கலை அருகே 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. இதனை தாக்கியது சிறுத்தையாக இருக்குமோ? என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தக்கலை:
தக்கலை அருகே 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. இதனை தாக்கியது சிறுத்தையாக இருக்குமோ? என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுத்தை பீதி
தக்கலை அருகே குடியிருப்புகள் நிறைந்த சரல்விளையை ஒட்டியுள்ள நரிச்சிக்கல், குழிவிளை, கொரங்கேற்றி ஆகிய இடங்களில் சிறுத்தை சுற்றி வந்ததாக ரப்பர் பால் வெட்ட சென்ற தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கடந்த ஒருவாரமாக சிறுத்தை வந்து விடுமோ? என்ற அச்சத்துடன் மக்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா உத்தரவுப்படி நரிச்சிக்கல் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.
2 ஆடுகளை கடித்துக் கொன்றது
மேலும் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வனக்காப்பாளர் கிருஷ்ணன் குட்டி, வேட்டை தடுப்பு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் கல்லாம்பொற்றை கிராமத்தில் 2 ஆடுகளை மர்மவிலங்கு கடித்துக் கொன்று போட்டிருப்பதாக தகவல் பரவியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. விவசாயி ஜோசப் சிங் (வயது 58) என்பவர் 2 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நாய் குரைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. உடனே அவர் எழுந்து வந்து வெளியே பார்த்துள்ளார். அப்போது ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மீண்டும் அவர் தூங்க சென்று விட்டார். மறுநாள் அதிகாலையில் எழுந்து வந்து வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது அங்கு கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு ஆட்டின் தலை துண்டான நிலையிலும், மற்றொரு ஆட்டின் சதைப் பகுதியை மர்மவிலங்கு தின்ற நிலையிலும் இறந்து கிடந்தது.
வனத்துறை ஆய்வு
இந்த ஆடுகளை சிறுத்தை தான் கடித்துக் கொன்றிருக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே மீண்டும் பரவியது.
இந்த பீதிக்கு இடையே மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆடுகள் இறந்து கிடந்த பகுதி மற்றும் அதனை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விலங்குகளின் கால் தடம் ஏதேனும் பதிந்திருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது எந்த தடயங்களும் கிடைக்காத நிலையில் ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கை பிடிப்பதற்கு கூண்டு வைக்க முடிவு செய்யப்பட்டது.
கூண்டு, கேமரா வைக்க முடிவு
மேலும் சிறுத்தையை பார்த்ததாக கூறிய இடம் உள்ளிட்ட 10 இடங்களில் கேமரா வைக்கும் பணி வனசரகர் அதியமான் தலைமையில் நேற்று நடந்தது. ஆடு கடித்துக் கொல்லப்பட்ட கல்லாம்பொற்றை கிராமத்தில் கூண்டு வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் 2 ஆடுகளை மர்மவிலங்கு கடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.