உடன்குடியில் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை


உடன்குடியில் வீட்டில் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்ட பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண், நகைக்காக மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் உடல் மீட்பு

உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. பனைத்தொழிலாளி. இவரது மனைவி சுயம்புகனி (வயது 55). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். சுயம்பு தைக்காவூரில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்து வருகிறார்.

வீட்டில் தனியாக வசித்து வந்த சுயம்புகனி கடந்த 14-ந் தேதி காலையில் வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்துள்ளார். இந்நிலையில் சுயம்பு கனியின் சகோதரி முத்துவும் (45) அவரது கணவர் சேகரும் கடந்த 16-ந்தேதி மதியம் 2 மணியளவில் சுயம்புகனி வீட்டுக்கு அருகே சென்றுள்ளனர். அப்போது சுயம்புகனி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சுயம்பு கனி அழுகிய நிலையில் பிணமாக தரையில் இறந்து கிடந்துள்ளார்.

நகைக்காக கொலை?

சுயம்புகனியின் கழுத்தில் சேலை இறுகிய நிலையில் காணப்பட்டது. சுயம்பு கனி அணிந்திருந்த தங்க கம்மல், தங்க மூக்குத்தி, கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணவில்லை.

இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று சுயம்புகனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை மர்ம நபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story