தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததா?அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததா?அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோடு

தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக கூறி அதிகாரிகளுடன், அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தபால் வாக்கு

ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 353 வாக்காளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்து கொள்ள படிவம் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் தபால் வாக்குகளை அவர்களது வீடுகளுக்கே 6 அதிகாரிகள் குழுவினர் சென்று பெற்று வந்தனர்.

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரில் மாணிக்கம்மாள் (வயது 86) என்பவரது வாக்கை அதிகாரிகள் குழுவினர் பதிவு செய்ய வைத்து, பெட்டியில் போட்டனர். வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் உடன் சென்றபோது, தி.மு.க.வை சேர்ந்த ஒருவர், மாணிக்கம்மாளை 'கை' சின்னத்தில் வாக்களிக்க செய்ததாக, அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள்

இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வாக்கு பெட்டியையும் அங்கிருந்து எடுத்துசெல்ல விடாமல் தடுத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு கூடினர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லுார் ராஜு, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன் ஆகியோரும் அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அந்த வாக்கு சீட்டுக்கு பதில் வேறு சீட்டை பதிவு செய்ய வேண்டும். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் வலியறுத்தினர். அரசியல் கட்சியினர் ஏராளமானோர் கூடியதால், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

துணை ராணுவத்தினர்

பின்னர் அவர்கள் அங்கு கூடி இருந்தவர்களிடம் பேசியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, வாக்குப்பெட்டியை துப்பாக்கி பாதுகாப்புடன் எடுத்து வந்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்.

மேலும் துணை ராணுவத்தினர் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன், அதிகாரிகளையும் அங்கிருந்து அழைத்து வந்து, ஜீப்பில் ஏற்றி மாநகராட்சி தேர்தல் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story