பெலவர்த்தி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் குப்பை கொட்டி புகார் அளித்த பொதுமக்கள்
குருபரப்பள்ளி:
பெலவர்த்தி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் குப்பையை கொட்டி பொதுமக்கள் புகார் அளித்தனர்.
கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள பெலவர்த்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினமான நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் செல்வராஜ், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டனி, வேளாண் அலுவலர் திருமால், கிராம சுகாதார செவிலியர் சுஜாதா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.
அப்போது வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மூட்டையை தூக்கி கொண்டு மனு கொடுப்பதை போல் வந்தனர். அவர்கள் திடீரென மூட்டையை பிரித்து அதில் இருந்த குப்பையை அங்கு கொட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுகாதார சீர்கேடு
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சியில் சேரும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. அள்ளப்படும் குப்பைகளும் எம்.சி. பள்ளி சாலையில் உள்ள வள்ளுவர்புரம் ஏரியில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினர்.
இதற்கு பதில் அளித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் கூறுகையில்,
குப்பைகள் அள்ளுவதற்கோ, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவோ போதிய நிதி அரசிடமிருந்து வருவதில்லை. அதனால்தான் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் சமரசம் அடைந்தனர்.