வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகாயத்தாமரை செடிகள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர பகுதியையொட்டி கோரையாறு, வெள்ளையாறு, வெண்ணாறு ஆகிய 3 ஆறுகள் உள்ளன. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்ட நிலையில் கோரையாற்றில் தண்ணீர் வற்றிய நிலையில் சில இடங்களில் மணல் திட்டுகள் காணப்படுகிறது.வெள்ளையாற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. ஆனால், இவைகளுக்கு மாறாக, கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் கண்ணுக்கு எட்டிய தூரம் மணல் திட்டுகளோ, தண்ணீர் தேக்கமோ தெரியாமல் வெண்ணாறு முழுவதையும் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளன.
தண்ணீா் செல்ல தடை
தற்போது, அங்கு வெண்ணாறு என்ற ஒரு ஆறு இருக்கிறதா? என்று கேட்கும் அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள், ஆற்றில் அதிக அளவு படர்ந்து உள்ளன. கூத்தாநல்லூர் அருகே உள்ள வாழச்சேரியில் தொடங்கி பொதக்குடி, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பண்டுதக்குடி, நாகங்குடி, பழையனூர், வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் என அடுத்தடுத்து உள்ள ஊர்களை கடந்து செல்லும் வெண்ணாறு முழுவதும் ஆகாயத்தாமரை செடிகளே அதிக அளவு படர்ந்து உள்ளது.வெண்ணாற்றை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுவதுடன் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெண்ணாறு முழுவதையும் பார்வையிட்டு, ஆகாய தாமரை செடிகளை அகற்றி ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் அகற்ற வேண்டும்
.இது குறித்து கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரிமுத்து கூறியதாவது:- வெண்ணாற்றில் தற்போது ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் உள்ளன. ஆகாய தாமரை செடிகள் அதிகரிக்கும் போது அவ்வப்போது அகற்றியிருந்தால் இந்த அளவுக்கு ஆகாய தாமரை செடிகள் பரவியிருக்காது. ஆகாய தாமரை செடிகள் அழுகிப் போய் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், கொசுக்கடி அதிகரித்து வருகிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் பூரான், தேள், பாம்பு போன்ற விஷப் பூச்சிகளும் செல்கிறது. எனவே சுற்றுச் சூழலை பாதுகாக்க ஆகாய தாமரை செடிகள் முழுவதையும் அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.