தற்காலிக காமராஜர் மார்க்கெட்டின் அவலநிலை மாறுமா


தற்காலிக காமராஜர் மார்க்கெட்டின் அவலநிலை மாறுமா
x

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக காமராஜர் மார்க்கெட்டின் அவலநிலை எப்போது மாறும் எனவும், புதிய மார்க்கெட் எப்போது செயல்பாட்டிற்கு வரும் எனவும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக காமராஜர் மார்க்கெட்டின் அவலநிலை எப்போது மாறும் எனவும், புதிய மார்க்கெட் எப்போது செயல்பாட்டிற்கு வரும் எனவும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்காலிக காமராஜர் மார்க்கெட்

தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.இந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லரை விற்பனை கடைகள் 212-ம், தரைக்கடைகளும் இருந்தன. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காமராஜர் மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனால் தஞ்சை புதுக்கோட்டை சாலை காவேரிநகர் அருகே காமராஜர் மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

சேறும், சகதியும்

அங்கு காமராஜர் மார்க்கெட் செயல்பாட்டிற்கு வந்த நாளில் இருந்து இன்று வரை ஒருநாள் மழைக்கு, ஏன் ஒரு மணிநேர மழைக்கு கூட தாக்குப்பிடிக்காத நிலை தான் உள்ளது. அதாவது தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் மழை தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

மழை நின்ற பிறகும்கூட கழிவுநீர் தேங்கியே கிடக்கிறது. தற்போது இந்த மார்க்கெட்டில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி காய்கறிகளின் கழிவுகளும் மழைநீருடன் கலந்துள்ளதால் மார்க்கெட் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வியாபாரிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கால் வைக்கும் இடம் எல்லாம் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மார்க்கெட்டின் நிலையை பார்த்துவிட்டு பொதுமக்கள் காய்கறிகளை வாங்காமல் திரும்பி செல்கின்றனர்.

நஷ்டம்

இதனால் காய்கறிகள் விற்கப்படாமல் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில காரணங்களால் அந்த மார்க்கெட் திறக்கப்படாமல் உள்ளது. புதிய மார்க்கெட் கட்டப்பட்டுள்ளதால் தற்காலிக மார்க்கெட்டை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து காய்கறி வியாபாரி முகமது ரகமத்துல்லா கூறும்போது, 5 நிமிடம் கூட இங்கு நின்று காய்கறிகளை மக்களால் வாங்க முடியாத நிலை தான் உள்ளது. ஆனால் இந்த இடத்தில் தான் நாங்கள் அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது தற்காலிக மார்க்கெட்டாக இருந்தாலும் உயிர் ரொம்ப முக்கியம். தயவு செய்து இந்த இடத்தை சுத்தம் செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றி தர வேண்டும் என்றார்.

எப்போது திறக்கப்படும்

மொத்த வியாபாரிகள் சிலர் கூறும்போது, புதிய காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை காலி செய்துவிட்டு புதிய காமராஜர் மார்க்கெட்டிற்கு செல்ல இருக்கிறோம் என்றனர்.


Next Story