சாக்கடை வாய்க்காலாக மாறிய மழைநீர் வடிகால்


சாக்கடை வாய்க்காலாக மாறிய மழைநீர் வடிகால்
x

தஞ்சையில் மழைநீர் வடிகால் சாக்கடை வாய்க்காலாக மாறிவருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் மழைநீர் வடிகால் சாக்கடை வாய்க்காலாக மாறிவருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீர்மேலாண்மை

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தவர். அவரது ஆட்சி காலத்தில் சிவகங்கை குளம், அய்யன் குளம், அழகி குளம் என 50-க்கும் மேற்பட்ட குளங்கள் தஞ்சையில் அமைக்கப்பட்டன. இதில் அழகி குளம் தஞ்சை நகரின் மையத்தில் பர்மா பஜார் அருகே அமைந்துள்ளது.அழகி குளத்துக்கு தஞ்சையை அடுத்த வல்லத்தில் இருந்து மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த வடிகால் காந்திஜி சாலை வழியாக அழகி குளத்தை சென்றடைகிறது.

ஆக்கிரமிப்பு

நவீன உலகில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கம், வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வயல்வெளிகள், நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதற்கு இந்த மழைநீர் வடிகால் விதிவிலக்கு அல்ல. ஆக்கிரமிப்புகள் காரணமாக வடிகால் வழியாக மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக காந்திஜி சாலையோரத்தில் உள்ள வடிகாலில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பிளாஸ்டிக் குப்பைகளும் அதிகளவில் குவிந்து கிடக்கிறது.

கழிவுநீர் வாய்க்கால்

இதனால் மழைநீர் வடிகால் கழிவுநீர் வாய்க்காலாக மாறி வருகிறது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகள், கழிவுநீரால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்கி கிடக்கும் கழிவுநீர், குப்பைகளை அகற்றவும், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிகால் வழியாக சுத்தமான மழைநீர் அழகி குளத்தை சென்றடை வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story