கழிவுநீர் கால்வாயான பாசன வாய்க்கால்


கழிவுநீர் கால்வாயான பாசன வாய்க்கால்
x

ஆக்கிரமிப்புகளில் சிக்கி கழிவுநீர் கால்வாயான பாசன வாய்க்காலை தூர்வாரி சீரமைக்காததால் விளைநிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலையில் உள்ளன.

திருவாரூர்

திருவாரூர்;

ஆக்கிரமிப்புகளில் சிக்கி கழிவுநீர் கால்வாயான பாசன வாய்க்காலை தூர்வாரி சீரமைக்காததால் விளைநிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலையில் உள்ளன.

பாசன வாய்க்கால்

திருவாரூர் விளமல் பகுதி ஒடம்போக்கியாற்றில் இருந்து பிரிந்து கேக்கரை பகுதிக்கு பாசனம் பெறும் வகையில் 'பி' சேனல் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்கால் திருவாரூர் நகர் பகுதி வழியாக கேக்கரைக்கு செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் கேக்கரை பகுதியில் 960 ஏக்கர்; பரப்பளவில் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றன.கோடை காலத்தில் அரசின் உதவியை எதிர்பார்க்காமல் கேக்கரை விவசாயிகள் ஒருங்கிணைந்து வாய்க்காலை தூர்வாரி பாசன வசதி பெற்று வந்தனர்.இந்நிலையில் திருவாரூர் பகுதியில் வழியாக செல்லும் 'பி' வாய்க்கால் கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வரும் பாதை தடைப்பட்டு கொண்டே சென்றது. மேலும் நகரில் உள்ள வீடுகள், கடைகளின் கழிவு நீர் 'பி' சேனல் வாய்க்காலில் கலக்க தொடங்கியது. நாளடைவில் இந்த வாய்க்கால் கழிவு நீர் கால்வாயாக மாறியது. இதனால் பல முறை போராட்டம் நடத்திய கேக்கரை விவசாயிகள் தீர்வு பெற முடியாமல் ஒய்ந்தனர்.

25 ஆண்டுகளாக

இதைத்தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக 'பி' சேனல் வாய்க்கால் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலையில் வானம் பார்த்த பூமியாக மழையை நம்பி சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இந்த நிலங்கள் தரிசாக மாறி கால போக்கில் வீட்டு மனைகளாக மாறி வருகிறது. தற்போது இந்த 'பி' சேனல் வாய்க்கால் கோரைபுல், வெங்காயத்தாமரை, செடிகள் முளைத்து முட்புதராக காட்சியளிக்கிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக வாய்க்கால் இருந்து வருகிறது. இதனால் பாசன வாய்க்கால் செல்லும் பகுதிகளில் தூர்நாற்றம் வீசி வருகிறது.இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறை பல ஆண்டுளாக கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கால்வாயாக மாறி பி சேனல் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story